சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் மனு
வாழப்பாடியில் அபகரிப்பு செய்த நிலத்தை மீட்டுத்தரக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.;
வாழப்பாடியில் அபகரிப்பு செய்த நிலத்தை மீட்டுத்தரக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
பட்டியலின மக்கள்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தென்சோலை கிராமம் கருமாபுரம் பகுதியை சேர்ந்த பட்டியலின மக்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
இதையடுத்து அவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தென்சோலை கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களான எங்களுக்கு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 90 ஏக்கருக்கு மேல் மானியமாக பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் விவசாயம் செய்து அனுபவித்து வருகிறோம். ஆனால் எங்களது ஏழ்மையை பயன்படுத்தி சிலர் வட்டிக்கு கடனுதவி வழங்கினர்.
நிலம் அபகரிப்பு
அதன்பிறகு சுமார் 40 ஏக்கர் நிலங்களை சிலர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரிப்பு செய்துள்ளனர். பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட அந்த நிலங்களை வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வாங்க முடியாது. நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்கனவே பலமுறை புகார் மனுக்களை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் நிலங்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் இப்படி காலம் தாழ்த்தியும், கண்டு கொள்ளாமல் போவதும் பட்டியலின மக்கள் மீது அக்கைறயற்ற நிலையை உணர்த்துகின்றது. எனவே, தாழ்த்தப்பட்ட ஆணையம் நேரடி விசாரணை மேற்கொண்டு பல கோடி மதிப்பிலான தென்சோலை கிராம பட்டியலின மக்களின் நிலங்களை மீட்க முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.