குடிநீர் வசதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.

Update: 2023-04-03 18:28 GMT

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் 637 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகளிடம் 62 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 42 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சத்து 60 ஆயிரத்து 460 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

புற்றுநோய் சிகிச்சைக்கு உதவ கோரிக்கை

கூட்டத்தில், கரூர் பசுபதிபாளையம் ராமானூர் பகுதியை சேர்ந்த உத்திராபதி என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-எனது இளைய மகன் அஸ்வின் (வயது 8). அவனுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த நவம்பர் மாதம் சிகிச்சைக்காக அழைத்து சென்றேன். அப்போது எனது மகனுக்கு பரிசோதனை செய்து பார்த்தபோது புற்றுநோய்க்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது. மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து பார்த்தபோது அரியவகை ரத்த புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

அதன்பிறகு கடந்த 4 மாதங்களாக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறோம். அதற்கு எங்களால் அதிகபணம் செலவு செய்ய முடியவில்லை. தாங்கள் எனது குழந்தையின் மேல்சிகிச்சைக்கும், உயர் சிகிச்சைக்கும் ஆவண செய்து, எனது மகனின் உயிரை காப்பாற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

குடிநீர் வசதி வேண்டும்

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, புன்னம், முத்துநகர் ஊர்பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- எங்கள் ஊர் பகுதியில் தார்சாலை வசதி இல்லை.

மேலும் குடிநீர் வசதியும் இல்லாமல் இருக்கிறது. ஆகவே எங்கள் ஊருக்கு தார்சாலை மற்றும் குடிநீர் வசதி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்