புதிய சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

புதிய சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Update: 2023-08-26 18:45 GMT

கீழக்கரை, 

கீழக்கரை நகராட்சி சார்பில் ரூ.97 லட்சம் மதிப்பீட்டில் சொக்கநாதர் கோவில் தெரு, சின்ன கடை தெரு, வடக்கு தெரு, தெற்கு தெரு, புதிய கிழக்கு தெரு, பெரிய காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சேதம் அடைந்துள்ள தார்சாலைகளை புதுப்பித்து புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பழைய சாலைகளை தோண்டி எடுத்துவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கூறிவந்தனர்.

இருப்பினும் பழைய சாலைகளை தோண்டாமல் புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு சாலை பணிகளை நிறுத்தினர். இதுகுறித்து அறிந்த நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் அவர்கள் அதனை ஏற்கவில்லை.

இதுகுறித்து வடக்கு தெரு பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே சாலைக்கு மேல் சாலைகள் அமைத்ததால் வீடுகள் அனைத்தும் சாலைக்கு கீழே சென்று விடுகின்றன. இதனால் மழை நீர் வீட்டிற்குள் புகும் நிலை உள்ளது. எனவே பழைய சாலையை தோண்டி எடுத்துவிட்டு புதிய சாலை அமைக்க வேண்டும் என்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்