சுடுகாடு பகுதியில் தடுப்பணை கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு

கந்திலி அருகே சுடுகாடு பகுதியில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டது.;

Update: 2022-07-14 18:02 GMT

கந்திலி அருகே சுடுகாடு பகுதியில் தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டது.

தடுப்பணை கட்ட எதிர்ப்பு

கந்திலி ஒன்றியம் மட்றப்பள்ளி கிராமத்தில் ரூ.3.5 கோடி செலவில் புதிய தடுப்பணை கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து மட்றப்பள்ளி கிராமத்தில் தடுப்பணை கட்ட நீர்வளத் துறை சார்பில் 3 இடங்களை தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டது. அதில் மட்றப்பள்ளி காலனி சுடுகாடு அருகே 200 அடி நீளம் 5 அடி உயரத்தில் தடுப்பணை கட்ட உத்தரவிடப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்காக சுடுகாட்டு பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் சமன் செய்யப்பட்டது.

பொதுப்பணி துறை உதவி பொறியாளர்கள் குமார், சங்கர் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் பணிகளை தொடங்க வந்தபோது அந்தப் பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பூபதி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தணிகாசலம், ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு இந்த பகுதியில் தடுப்பணை கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

பணிகள் நிறுத்தம்

மட்றப்பள்ளி காலனி பகுதியில் வசிப்பவர்களுக்காக சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள சுடுகாட்டில் பல தலைமுறைகளாக பிணங்களை புதைத்து வருகிறோம்.

இங்கு தடுப்பணை கட்டப்பட்டால் எங்களது உறவினர்கள் இறந்தால் புதைப்பதற்கு இடம் கிடையாது. எனவே இந்த இடத்தில் தடுப்பணை கட்ட விடமாட்டோம். மேலும் சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த பிணங்களை தொண்டி எடுத்து கும்பலாக வைத்து எரித்து உள்ளனர் என கூறி தங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்