ஓமலூர் அருகே காமலாபுரத்தில் 2 ஏரிகளில் மீன்பிடி உரிமத்துக்கு ஏலம் விட பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு
ஓமலூர் அருகே காமலாபுரம் கிராமத்தில் உள்ள 2 ஏரிகளின் மீன்பிடி உரிமத்துக்கான ஏலத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்,
2 ஏரிகளில் மீன்பிடி குத்தகை
ஓமலூர் அருகே காமலாபுரம் கிராமத்தில் சின்ன ஏரி, பெரிய ஏரி என இரண்டு ஏரிகள் உள்ளன. இந்த ஏரி தொடர் மழை காரணமாக தண்ணீர் நிரம்பி காட்சி அளிக்கிறது.
இந்த ஏரியின் மூலம் காமலாபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் 2 ஏரிகளிலும் கட்லா உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் அதிகளவில் உள்ளன.
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த 2 ஏரிகளின் மீன் பிடி உரிமத்துக்கான ஏலம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. சமீபகாலமாக ஓமலூர் தாலுகா உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கு மீன் குத்தகை விடப்பட்டது. குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக குத்தகை தொகையாக பெரிய ஏரி சுமார் ரூ.2 லட்சத்துக்கும், சின்ன ஏரி சுமார் ரூ.2½ லட்சத்துக்கும் மீன் பிடிக்க ஏலம் விடப்பட்டது.
பொதுஏலம்
இந்த நிலையில் குத்தகை காலம் 6 மாதங்களுக்கு முன்பு முடிந்து விட்டது. இதனால் காமலாபுரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் பலரும் ஏரியில் மீன் பிடித்து பயன்படுத்தி வந்தனர். நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் மீன்வளத்துறை அதிகாரிகள், இந்த 2 ஏரிகளின் மீன் பிடி உரிமைக்கான பொது ஏலம் விட ஏற்பாடு செய்தனர்.
அப்போது மீன்பிடி உரிமையை ஏலம் எடுக்க பல்வேறு பகுதிகளை சேர்ந்த மீனவர்களும், கிராம மக்களும் வந்திருந்தனர். அதிகாரிகள் ஏலத்தை அறிவிக்கும் போது அங்கு வந்த கிராமப்புற இளைஞர்கள், பொதுமக்கள், மீன்பிடி ஏலம் நடத்துவது குறித்து முறையாக யாருக்கும் அறிவிக்காமல், குறிப்பிட்ட சிலரை மட்டும் வைத்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது எனவும், ஏலம் நடத்தக்கூடாது, பொது ஏலத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு புகார் தெரிவித்தனர்.
ஒத்திவைப்பு
அப்போது பொதுமக்கள் அதிகாரிகளிடம் கூறியதாவது:-
ஏரியில் மீன் பிடி உரிமை குத்தகைதாரர்கள், மீன் வளர்ப்புக்காக ஏரியில், இறைச்சி கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவற்றை கொட்டி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றனர். அதனால் தண்ணீர் வளம் பாதிக்கிறது. ஏரியில் குளிக்கக்கூட முடிவதில்லை.
தோல் நோய்கள் ஏற்படுகிறது. மேலும் ஏலம் எடுக்கும் குத்தகைதாரர்கள், சட்டவிரோதமாக மற்றொரு மறைமுக ஏலத்தை நடத்தி, பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் விடுகின்றனர். இதனால், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் ஏலம் விடக்கூடாது. இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.
இதையடுத்து அதிகாரிகள், தேதி குறிப்பிடாமல் ஏலத்தை ஒத்திவைத்து விட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.