முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம்
மகாளய அமாவாசையொட்டி முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.;
மகாளய அமாவாசை
இந்துக்களில் மறைந்த முன்னோர்களுக்கு தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதில் மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பது மறைந்த முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் தை, ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
இந்த தினத்தில் தர்ப்பணம் கொடுப்பது முக்கியவத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் தோஷங்கள் நீங்கவும் முன்னோர்கள் வழிபாட்டிற்கும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இதனால் மகாளய அமாவாசை தினத்தில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க நீர்நிலை பகுதிகளில் குவிவது உண்டு. அந்த வகையில் புதுக்கோட்டையில் பல்லவன் குளக்கரையில் தர்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் ஏராளமானோர் வந்தனர்.
கோவில்களில் வழிபாடு
பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க வசதியாக முன்னேற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்டவர்களை அமர வைத்து மறைந்த முன்னோர்களின் பெயர், ராசி குறிப்பிட்டு புரோகிதர்கள் வேத மந்திரங்களை ஓதினர். முன்னோர்களை நினைத்து வழிபட்ட பின் பிண்டங்களை நீர்நிலைகளில் பொதுமக்கள் கரைத்தனர்.
மேலும் அருகில் உள்ள சாந்தநாத சாமி கோவிலில் தரிசனம் செய்தனர். பசுக்களுக்கு அகத்திகீரைகளை வழங்கினர். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதேபோல மகாளய அமாவாசை தினத்தையொட்டி கோவில்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனால் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மணமேல்குடி
மணமேல்குடி கோடியக்கரையில் பொதுமக்கள் திரண்டனர். பின்னர் கடலில் பொதுமக்கள் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் அருகில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.