அதிக சத்தம் எழுப்பும் காற்று ஒலிப்பானால் பொதுமக்கள் அவதி

கும்பகோணம் பகுதியில் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக சத்தம் எழுப்பக்கூடிய (ஏர்ஹாரன்) காற்று ஒலிப்பானால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-06-14 18:45 GMT

கும்பகோணம்:

கும்பகோணம் பகுதியில் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக சத்தம் எழுப்பக்கூடிய (ஏர்ஹாரன்) காற்று ஒலிப்பானால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். .

காற்று ஒலிப்பான்

கும்பகோணம் பகுதிக்கு தினமும் ஏராளமான தனியார் மற்றும் அரசு பஸ்கள் பல்வேறு ஊர்களில் இருந்து இயக்கப்படுகின்றன. தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கும் அதிகளவிலான லாரிகள், கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.

இவ்வாறு வரும் பெரும்பாலான அரசு, தனியார் பஸ், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்கள் (ஏர்ஹாரன்கள)் பொருத்தப்பட்டுள்ளன.

இது போக்குவரத்து விதிமீறலுக்கு உட்பட்டதாகும். கூட்டம் அதிகமாக உள்ள பகுதிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் செல்லும் பகுதிகளில் வாகனங்கள் அதிக ஒலி எழுப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

பொதுமக்கள் அவதி

அதுமட்டுமின்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளை எரிச்சலூட்டும் வகையில் இடைவிடாமல் காற்று ஒலிப்பான்கள் ஒலிக்கப்படுகின்றன. சாலையோரத்தில் நடந்து செல்பவர்கள் அருகே சென்று திடீரென காற்று ஒலிப்பான்களை அடிக்கின்றனர்.

இதனால் அதிர்ச்சியில் சிலர் சிறிது நேரம் செய்வதறியாது திகைத்து போய்விடுகின்றனர். இத்தகைய செயல்கள் கும்பகோணத்தின் முக்கிய வீதிகள், பஸ் நிலையம், தாராசுரம் பகுதியில் அரங்கேறி வருகின்றன.

அதிகாரிகள் நடவடிக்கை

காற்று ஒலிப்பான்களால் ஏற்படும் அதிக இரைச்சல் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். சில சமயங்களில் திடீரென எழுப்பப்படும் இது போன்ற அதிக சத்தத்தால் சாலையில் செல்பவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கும்பகோணம் பகுதியில் அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்களுடன் இயங்கும் அரசு, தனியார் பஸ்கள், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்களை கண்டறிந்து அ வற்றை அகற்றவும், மீறி அவற்றை வைத்திருக்கும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கைஎடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்