விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் மக்கள் சந்திப்பு பிரசாரம்
முத்துப்பேட்டை, நீடாமங்கலத்தில் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் மக்கள் சந்திப்பு பிரசாரம் நடந்தது.
முத்துப்பேட்டை:
இந்திய தொழிற்சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களை எதிர்த்து அடுத்த மாதம் டெல்லி நாடாளுமன்றம் முன்பு ஊர்வலம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் முன்பு மக்கள் சந்திப்பு பிரசாரம் நேற்று சி.ஐ.டி.யூ. மாவட்டக்குழு உறுப்பினர் செல்லத்துரை தலைமையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். நடை பயணத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு தொடங்கி வைத்து பேசினார். இதில் வேளாண்மை விளை பொருட்களுக்கு ஆதார விலை வழங்க வேண்டும். விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மாயமாக்க கூடாது. பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு ஆகிய பொருட்களின் மீதான வரியை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் விளக்கப்பட்டது.
இதேபோல் நீடாமங்கலம் ஒன்றியத்தில் நடந்த பிரசார பயணத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பி.கந்தசாமி தலைமை தாங்கினார். நீடாமங்கலம் அண்ணா சிலையில் முன்பு இருந்து தொடங்கிய பிரசார பயணம் பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று நீடாமங்கலம் பெரியார் சிலை முன்பு வந்து நிறைவடைந்தது. இதில் விவசாய சங்க நிர்வாகிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.