காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

Update: 2023-08-02 19:30 GMT

தர்மபுரியில் காவல்துறை சார்பில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் 142 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது.

குறைதீர்க்கும் முகாம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை தர்மபுரியில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் மாவட்டம் முழுவதும் 33 போலீஸ் நிலையங்களில் இருந்து தனித்தனியாக புகார் மனுதாரர்கள் நேரில் வரவழைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நிலத்தகராறு, சொத்து தகராறு, அடிதடி தகராறு, பொது வழி பிரச்சினை, குடும்பத்தகராறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 166 மனுக்கள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. போலீஸ் அதிகாரிகள் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

உடனடி தீர்வு

இந்த விசாரணையில் 142 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 24 மனுக்கள் தொடர் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிக்கு புகார் மனுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு விரைவில் தீர்வு காண அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகலிங்கம், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரங்கசாமி, சுரேஷ் உள்ளிட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்