ராமநத்தம் பகுதியில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் அமைச்சர் சி.வெ. கணேசன் மனுக்களை பெற்றார்
ராமநத்தம் பகுதியில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் சி.வெ. கணேசன் கலந்து கொண்டு பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.
ராமநத்தம்,
ராமநத்தம் அடுத்துள்ள சித்தூரில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.இதற்கு அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இதேபோல், ஆலத்தூர், கீழ்கல்பூண்டி, மேல்கல்பூண்டி, வடகாரம்பூண்டி, கொரக்கவாடி ஆகிய பகுதிகளில் மக்களை சந்தித்து மனுக்களை பெற்றார். இதில் ஆலத்தூர் கிராமத்தில் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருவதற்கு பஸ் வசதியும், கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைப்பது, மயானம் பாதை அமைத்து தருவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கிராம மக்கள் அமைச்சர் சி.வெ. கணேசனிடம் வழங்கினர்.
மேலும், சித்தூரில் வழங்கப்படும் குடிநீர் அதிக உப்பாக இருப்பதால் சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் வழங்க வேண்டும் என்றும் மனு அளித்தனர். இதுதவிர முதியோர் உதவி தொகை, கணவனால் கைவிப்பட்டோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் மனுக்களை வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர் சி.வெ. கணேசன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதில் விருத்தாசலம் கோட்டாட்சியர் ராம்குமார், திட்டக்குடி தாசில்தார் கார்த்திக், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் தி.மு.க. ஒன்றி செயலாளர்கள் செங்கூட்டுவன், பட்டூர் அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.