இ-சேவை மையத்தில் குவிந்த பொதுமக்கள்

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கு ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை திருத்துவதற்காக ஏராளமானோர் இ-சேவை மையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

Update: 2023-07-24 20:00 GMT

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரே எமிஸ் பதிவெண்ணை பராமரிக்க அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த எமிஸ் பதிவெண்ணில் மாணவ-மாணவிகளின் ஆதார் எண்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இந்த பதிவெண்ணில் உள்ள விவரங்கள் சான்றிதழில் அச்சிடப்படும் என்பதால், ஆதார் அட்டையில் உள்ள பெயர், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர் பெயர்களில் உள்ள திருத்தங்களை சரிசெய்வதற்காக ஏராளமானோர் இ-சேவை மையத்திற்கு சென்று, திருத்தி வருகின்றனர். அதேபோல் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கும் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை, குறிப்பாக செல்போன் எண்ணை திருத்துவதற்காகவும் தற்போது ஏராளமானோர் இ-சேவை மையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் இ-சேவை மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

இந்தநிலையில் கம்பம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் நேற்று காலை 7 மணி முதலே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்களது ஆதார் அட்டையில் விவரங்களை திருத்துவதற்காக வந்திருந்தனர். அதிலும் கைக்குழந்தையுடனும் ஏராளமானோர் வந்தனர். இ-சேவை மைய பணியாளர்கள் வந்தவுடன் பொதுமக்கள் வரிசையில் நிற்காமல் கூட்டமாக கூடினர். இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் அவதியடைந்தனர். இதையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் பொதுமக்களை சமரசம் செய்தனர். அதன்பிறகு இ-சேவை பணிகள் தொடங்கி நடைபெற்றன. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கம்பம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் மட்டுமே ஆதார் அட்டையில் திருத்தம் செய்யப்படுகிறது. இதனால் இங்கு கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 40 நபருக்கு மட்டுமே பதிவேற்றம் செய்யப்படுகிறது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்