பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

Update: 2023-06-07 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் பொதுவினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10-ந்தேதி நடக்கிறது என்று கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு்ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்டத்தில், பொது வினியோக திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது வினியோக திட்ட சிறப்பு பொது மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 10-ந்தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டம் மாவட்டத்திற்குள் உள்ள அனைத்து வட்டங்களிலும் நடைபெறுகிறது. திருவாரூர் வட்டம் பெருங்குடி கிராமத்தில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெறுகிறது.

அதன்படி நன்னிலம் வட்டம் மகாராஜபுரம் கிராமத்தில் சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் வட்டம் தென்கோவனூர் கிராமத்தில் திருவாரூர் கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் தலைமையிலும், குடவாசல் வட்டம் செருகளத்தூர் கிராமத்தில் மாவட்ட வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், வலங்கைமான் வட்டம் 34.திருவோணமங்கலம் கிராமத்தில் திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குனர் தலைமையிலும் கூட்டம் நடைபெறுகிறது.

துணைப்பதிவாளர் தலைமையில்

நீடாமங்கலம் வட்டம் பெருமாளகரம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், மன்னார்குடி வட்டம் சோழபாண்டி கிராமத்தில் மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி வட்டம் மருதவனம் கிராமத்தில் திருவாரூர் பொது வினியோகத்திட்டம் துணைப்பதிவாளர் தலைமையிலும், முத்துப்பேட்டை வட்டம் பாலையூர் கிராமத்தில் மன்னார்குடி சரக துணைப்பதிவாளர் தலைமையிலும் மற்றும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் கூட்டம் நடைபெற உள்ளது.

புகார்கள் குறித்த கோரிக்கை மனுக்கள்

எனவே தொடர்புடைய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள்-கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன்பெறலாம்.

அத்தியாவசியப்பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்றவை குறித்த கோரிக்கை மனுக்களை 10-ந்தேதி நடக்க உள்ள மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மேற்காணும் அலுவலர்களிடம் அளித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்