கடலூா் மாவட்டத்தில் 10 இடங்களில் பொது வினியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது

கடலூா் மாவட்டத்தில் 10 இடங்களில் பொது வினியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.

Update: 2022-07-07 17:26 GMT


கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாக்களுக்குட்பட்ட கிராமங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) பொது வினியோகத்திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. அதாவது கடலூர் தாலுகா பெரியகங்கணாங்குப்பம் கிராமத்திலும், பண்ருட்டி தாலுகா மாளிகைமேடு கிராமத்திலும், குறிஞ்சிப்பாடி ரெங்கநாதபுரம், சிதம்பரம் லால்புரம், காட்டுமன்னார்கோவில் சிறகிழந்தநல்லூர், புவனகிரி கீழமணக்குடி, விருத்தாசலம் கருவேப்பிலங்குறிச்சி, திட்டக்குடி இடைச்செருவாய், வேப்பூர் பூலம்பாடி, ஸ்ரீமுஷ்ணம் தாலுகா வடக்கு பாளையம் கிராமத்திலும் நடக்கிறது.

ஆகவே மேற்கண்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டை, செல்போன் எண் பதிவு மற்றும் மாற்றம் செய்வதற்கான கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்படும். மேலும் 65 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்களும், 60 சதவீத ஊனத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனு அளிக்கலாம்.

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளித்து பயன்பெறலாம். இந்த கூட்டத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன்கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்கலாம்.

மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்