காா்பைட் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை?
ராமநாதபுரம் மாவட்டத்தில் கார்பைட் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கார்பைட் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்கள் விற்பனை அதிகமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மாம்பழங்கள்
முக்கனிகளான மா, பலா, வாழை ஆகியவற்றில் முக்கிய இடம் பிடித்துள்ள மாம்பழம். தற்போது கோடைக்காலம் தொடங்கி உள்ள நிலையில் மாம்பழம் சீசனும் நடைபெற்று வருகிறது. மாம்பழ விளைச்சல் அதிகமாக உள்ளதால் விற்பனை அதிகமாக நடக்கிறது. இந்த மாம்பழங்கள் காயாக இருக்கும் போதே அதிக விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற வியாபார கண்ணோட்டத்தில் குறுக்கு வழியில் அதனை கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்து சிலர் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த மாம்பழங்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக மஞ்சள் நிறத்துடனும், நன்கு பழுத்த பழம் போன்றும் காணப்படுவதால் அதனை காணும் மக்கள் கவர்ந்திழுக்கப்பட்டு நல்ல பழம் என்று நம்பி உடனடியாக வியாபாரிகள் சொன்ன விலைக்கு வாங்கி செல்கின்றனர். இந்த மாம்பழங்களை சாப்பிடுபவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு உயிரிழப்பு வரை செல்லக்கூடிய தீராத நோய்கள் உருவாகி வருகின்றன.
கார்பைட் கல் மூலம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுபோன்று கார்பைட் கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இயற்கையான முறையில் விளைந்த ஹைபிரிட் மாம்பழம் என்று கூறி கார்பைட் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களையே அதிக விலைக்கு விற்பனை செய்வதும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறியதாவது:- மாம்பழங்கள் மாமரங்களில் இருக்கும்போதே இயற்கையாக உற்பத்தியாகும் எத்திலின் மூலம் பழுத்துவிடும். மாங்காய்களை வாழைப்பழம், பப்பாளி போன்றவற்றுடன் கலந்து வைத்தால் இயற்கையாகவே எத்திலின் சுரந்து பழுத்து விடும். ஆனால், வியாபார நோக்கத்தில் காயாக இருக்கும் போதே அதனை பறித்து வந்து செயற்கையாக கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். இந்த பழங்களை உண்பதால் வயிற்றில் புண், வாந்தி, மயக்கம், உயர் ரத்த அழுத்தம், வயிற்று போக்கு போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
நடவடிக்கை
இதனை அறியாமல் அதிக வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு என்று நினைத்து மக்கள் சிகிச்சை பெறுகின்றனர் என்று கூறினார். மாவட்டத்தில் அரசின் உத்தரவை மீறி இதுபோன்ற கார்பைட் கல் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.