அரிசி ஆலையில் இருந்து காற்றில் பறக்கும் கரித்துகள்களால் பொதுமக்கள் பாதிப்பு

எருக்கூர் அரிசி ஆலையில் இருந்து காற்றில் பறக்கும் கரித்துகள்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-09 18:21 GMT


கொள்ளிடம்

எருக்கூர் அரிசி ஆலையில் இருந்து காற்றில் பறக்கும் கரித்துகள்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


அரிசி ஆலை

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே எருக்கூர் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலை உள்ளது. இந்த ஆலை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. சீர்காழி வட்டத்தில் உள்ள 37 நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து வாங்கப்படும் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு இந்த அரிசி ஆலைக்கு அரவைக்காக கொண்டு வரப்படுகிறது.

இந்த ஆலையில் நிலை-1, நிலை-2 என நெல் பதப்படுத்துதல் மற்றும் அரவை பகுதிகள் உள்ளன. நெல்லை வேகவைத்து உமியை கொண்டு அரைத்து பின்னர் அரிசியாக்கி மூட்டைகளாக கிடங்கில் பாதுகாத்து ஆக்கூர், சித்தர்காடு, நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பாக ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.


கரித்துகள்கள் பறப்பதால் பாதிப்பு

இந்த அரிசி ஆலையில் நெல்லை அரைக்கும்போது உமி கரித்துகள்களாக மாறி அந்த பகுதி முழுவதும் காற்றில் பறக்கிறது. இந்த கரித்துகள்கள் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கண்களில் விழுகிறது. மேலும், சீர்காழி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கண்களில் விழுகிறது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் நிலை நேரிடுகிறது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 2015-ம் ஆண்டு ரூ.6 கோடி செலவில் கரித்துகள்கள் காற்றில் பறக்காத வகையில் நவீனப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

இருந்தாலும், ஆலையில் இருந்து கரித்துகள்கள் மீண்டும் காற்றில் பறந்த வண்ணமே உள்ளது. இந்த கரித்துகள்கள் அப்பகுதி வீடுகளில் உள்ள குடிநீர் பாத்திரங்கள், உணவு பொருட்களில் படர்கிறது. ஆகவே, கரித்துகள்கள் பறக்காத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்