திருத்தணியில் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் அரசு பஸ்சை சிறைபிடித்த பொதுமக்கள்

திருத்தணியில் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் அரசு பஸ்சை சிறை பிடித்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-21 13:00 GMT

திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட முருகூர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் திருத்தணி சென்று படிக்கும் சூழல் இருக்கிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வெளியூர்களுக்கு வேலைக்கு செல்ல பஸ்சை தான் நம்மியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் முருகூர் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக நின்றிருந்தபோது அந்த வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிற்காமல் செல்வதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காலை அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

தகவல் அறிந்து திருத்தணி போக்குவரத்து பணிமனை மேலாளர் அரிபாபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இனிவரும் காலங்களில் இந்த வழித்தடத்தில் வரும் அரசு பஸ்கல் முருகூர் பஸ் நிறுத்தத்தில் நின்று செல்லும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் திருத்தணி- சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்