பொதுமக்கள் தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்
பொதுமக்கள் தங்கள் குறைகளை கலெக்டர் அலுவலகத்தில் மனுவாக கொடுத்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்தார்.;
கிராமசபை கூட்டம்
கந்திலி ஊராட்சி ஒன்றியம், நத்தம் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரங்கசாமி குமார் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் துரை வரவேற்றார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தன் முன்னிலை வைத்தார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா கலந்துகொண்டு ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 350 பேருக்கு தென்னங்கன்றுகளை வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
கேள்வி கேட்க வாய்ப்பு
திருப்பத்தூர் மாவட்டத்தில் காலியாக உள்ள நில அளவையாளர்கள் பணியிடங்களை நிரப்புவது சம்பந்தமாக அரசுக்கு கடிதம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு சம்பந்தமாக தமிழ்நாடு அரசு ஆணையின்படி தாசில்தார் மூலமாக 64 நாட்களுக்குள் ஆய்வு செய்து, குழு மூலமாக பரிசீலனை செய்து ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.
இந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தின் மூலமாக பொதுமக்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகள் மற்றும் கேள்விகளை நேரடியாக அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் கேட்பதற்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது. இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு திட்டங்களை பதாகைகள் மூலம் பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலமாக பொதுமக்கள் தங்களது கிராமங்களில் உள்ள திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்.
கலெக்டர் அலுவலகத்தில்...
பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை எங்கு கொடுக்க வேண்டும் என்று தகவல் இல்லை என்றால் நேரடியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து தங்களின் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் திட்ட அலுவலர் செல்வராசு, வருவாய் அலுவலர் வளர்மதி, கோட்டாட்சியர் லட்சுமி, உதவி திட்ட அலுவலர் விஜயகுமாரி, தாசில்தார் சிவப்பிரகாசம், ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் லதா நன்றி கூறினார்.