தண்ணீர் திறப்பு விவகாரத்தில் பொதுமக்கள் சாலை மறியல்
தண்ணீர் திறப்பு விவகாரத்தில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை சண்முகா நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் எராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி வழியாக சந்திரமதி வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் மூலமாக பொன்னம்பட்டி பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது சந்திரமதி வாய்க்காலில் கழிவு நீர் செல்லும் ஓடையாக மாறிவிட்டதாகவும், அதனால் சண்முகா நகர், லட்சுமி நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். மேலும் இந்த சந்திரமதி வாய்க்கால் வழியாக செல்லும் நீரை மாற்று பாதையில் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சிக்கு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து சந்திரமதி வாய்க்கால் பகுதியில் மண் கொட்டி அடைக்கப்பட்டது. இந்த நிலையில் மழைக்காலங்களில் பாசனத்திற்காக தண்ணீர் வருவதற்கு வசதியாக இந்த மண்ணை அகற்ற வேண்டும் என பொன்னம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருந்தன. இந்த நிலையில் விவசாயம் தொடங்கிய நிலையில் பொன்னம்பட்டி பகுதி மக்களே சந்திரமதி வாய்க்காலில் அடைக்கப்பட்டிருந்த மண்ணை அகற்றினர். இதனால் அதன் வழியாக குளத்திற்கு தண்ணீர் பாய்ந்தது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லட்சுமி நகர், சண்முகா நகர் பகுதி மக்கள் டி.வி.எஸ்.கார்னர் அருகே உள்ள பொன்னம்பட்டி பகுதியில் திருமயம் சாலையில் அமர்ந்து மறியலில் நேற்று மாலை ஈடுபட்டனர். இந்த தண்ணீரானது கழிவு நீர் என்றும், இதனை உடனடியாக அடைக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதேநேரத்தில் பொன்னம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் அங்கு வந்த நிலையில், பொதுமக்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். மேலும் இன்று (அதாவது நாளை) அமைதி பேச்சுவார்த்தையில் முடிவு செய்துக்கொள்ளலாம் என போலீசார் தெரிவித்ததன் அடிப்படையில் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.