குடியிருக்க மாற்று இடம் வழங்கக்கோரிசப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகைசிதம்பரத்தில் பரபரப்பு

குடியிருக்க மாற்று இடம் வழங்கக்கோரி சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-04-21 18:45 GMT

சிதம்பரம், 

ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

சிதம்பரம் அருகே உள்ள மணலூர் லால்புரம் ஊராட்சிக்குட்பட்ட பாசிமுத்தான் ஓடை கரையோரம் பொதுமக்கள் வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்த நிலையில் நீர் நிலையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாக கூறி பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்த 9 வீடுகளை இடித்து அகற்றினர்.

இதனால் வீடுகளை இழந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.

பொதுமக்கள் முற்றுகை

பின்னர் அவர்கள் குடியிருக்க தங்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி திடீரென சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதைபார்த்த வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி, சப்-கலெக்டரிடம் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மாற்று இடம் கேட்டு சப்-கலெக்டரிடம் மனு கொடுத்து சென்றனர்.

அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் வி.எம்.சேகர், அகில இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பூராசாமி, வட்ட செயலாளர் தமிமுன் அன்சாரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடனமயிலோன், லோக் ஜனசக்தி நிர்வாகி பன்னீர், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இளவழுதி, சரித்திரன், மராந்தூர் ராஜேஷ், சிவக்குமார் உள்பட அரசியல் கட்சியினர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்