காற்று மாசுபாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பேரணி

காற்று மாசுபாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு பேரணியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-08 13:00 GMT

சர்வதேச நீல வானத்திற்கான தூய காற்று தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 7-ந்தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக காற்று மாசுபாடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ- மாணவிகள், மாசு கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்கள் மற்றும் தொழிற்சாலை பணியாளர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்தபேரணியானது திருவள்ளூர் பஸ் நிலையம் வரை சென்று முடிவடைந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் சுற்றுச்சூழல் மர எரிபொருள் உபயோகிப்பதை தடுத்தல், கருப்பு கார்பன் உருவாகுவதை தடுத்தல், மீத்தேன் உருவாகுவதை தவிர்த்தல், மக்கும் குப்பை மக்காத குப்பை என குப்பைகளை தரம் பிரித்து வழங்குதல், சுத்தமான காற்று சுகாதாரமான உலகத்தை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கியபதாகைகளை கையில் ஏந்தியவாறு நடை பேரணியாக சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமேகலை, மாணவ-மாணவியர்கள், தொழிற்சாலை பணியாளர்கள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்