கோர்ட்டுகளில் செயல்படும் சமரச மையங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
கோர்ட்டுகளில் செயல்படும் சமரச மையங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
கோத்தகிரி
தமிழ்நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக சுமுக தீர்வு காணும் வகையில் அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் சமரச மையங்கள் செயல்படுகின்றன. இந்த மையங்களின் செயல்பாடுகள் மற்றும் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே 4 நாட்களுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரியில் உள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாஜிஸ்திரேட்டு வனிதா தலைமை வகித்து பேசுகையில், கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முன்னிலையில் வழக்கு தரப்பினர் நேரிடையாக பேசி சுமுக தீர்வு காணலாம். இதனால் இரு தரப்பினருக்கும் வெற்றி கிடைக்கிறது. எனவே சமரச மையங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார். வக்கீல் மணிகுமார் பேசுகையில், சமரச மையத்தில் தீர்வு காணப்பட்டால் நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெறலாம். உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே விரைவாக கையாண்டு, சுமுகமான தீர்வுகளை கட்டணமின்றி காண முடியும். சமரச மையத்தில் காணப்படும் தீர்வு இறுதியானது. இதற்கு மேல் முறையீடு கிடையாது என்று தெரிவித்தார். தொடர்ந்து பொதுமக்களுக்கு சமரச விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, துணை தாசில்தார் நந்தகுமார், வக்கீல் சங்க தலைவர் பாலசுப்பிரமணி, வக்கீல்கள் குயிலரசன், மோகன், ரவி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் சட்ட உதவி மைய அலுவலர் கஜலட்சுமி நன்றி கூறினார்.