மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தல்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என கலெக்டரிடம் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
மேல்மலையனூர் கிராம மக்களுக்கு சொந்தமான 80 ஏக்கர் நிலத்தை அங்காளம்மன் கோவிலுக்காக கையகப்படுத்தப்போவதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறையினர் புலதணிக்கை செய்தனர். எங்களுக்கு இந்த நிலத்தை தவிர வேறு நிலங்கள் ஏதும் கிடையாது. இந்த நிலங்களின் மூலம் வரும் வருவாயைக்கொண்டு ஜீவனம் செய்து வருகிறோம். ஏற்கனவே கோவிலுக்கு சொந்தமான இடம் 19 ஏக்கர் உள்ளது. அந்த நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் தேவையற்ற பழைய கட்டிடங்கள், வணிக வளாகத்தை அப்புறப்படுத்தினாலே கோவிலுக்கு தேவையான இடம் கிடைப்பதோடு பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய இடவசதி இருக்கும். ஆனால் இந்த நடவடிக்கையை மேற்கொள்ளாமல் வேண்டுமென்றே இடநெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து செஞ்சி கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு நிலுவையில் உள்ளது. கோவில் வளாகத்தையொட்டி பல்வேறு தனிநபர்கள் வணிக வளாகங்கள், தங்கும் விடுதி, வாகனங்கள் நிறுத்தம், குளியலறை, கழிவறை போன்றவற்றை ஏற்படுத்தி வருவாய் ஈட்டி வருகின்றனர். அதன் மூலமே அவர்களுக்கு வருமானம் உள்ளது. கோவில் விரிவாக்கத்திற்காக சுமார் 80 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம் செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது ஏற்புடையதல்ல. இது பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் செயலாகும். கோவில் வளாகத்தையொட்டி உள்ள நிலங்களில் உண்மையான சந்தை மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் ஆகும். தனிப்பட்ட நபர்களின் லாபங்களுக்காக கோவில் விரிவாக்கம் என்ற பெயரில் நிலம் ஆர்ஜிதம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவது நியாயமானது அல்ல. 80 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்ய ஏற்பாடு செய்து வருவது உள்ளூர் மக்களின் நலனுக்கு எதிரானது. எனவே இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற மாவட்ட கலெக்டர் பழனி, இதுகுறித்து பரிசீலனை செய்வதாக கூறினார்.