கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்தினால் பொதுமக்கள் பாதிப்பு

கிராம நிர்வாக அலுவலர்களின் தொடர் போராட்டத்தினால் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-01-06 16:17 GMT

கிராம நிர்வாக அலுவலர்களின் தொடர் போராட்டத்தினால் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்ளிருப்பு போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு உதவி கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார். வட்ட தலைவர் அருள் வரவேற்றார். இதில் மாநில பொது செயலாளர் சுரேஷ் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது:-

செய்யாறு கோட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் பணி சார்ந்த தேர்வு நிலை, பணி வரன்முறை உள்ளிட்ட கோப்புகளின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் சுமார் 75 கிராம நிர்வாக அலுவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வருவாய் நிர்வாக ஆணையரின் உத்தரவின்படி மாதந் தோறும் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோருடன் நடத்த வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்கள் குறைதீர்வு கூட்டம் நடத்தப்படவில்லை.

வெம்பாக்கம் தாலுகாவில் பணிபுரிந்த கிராம நிர்வாக அலுவலர் பச்சையப்பன் என்பவரை எவ்வித முகாந்திரமும் இன்றி சேத்துப்பட்டு தாலுகாவிற்கு பணியிடம் மாறுதல் செய்தது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் 500-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முடிவில் மாவட்ட பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

பொதுமக்கள் பாதிப்பு

கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடும் அதே வேளையில் கடந்த 31-ந்தேதி முதல் செய்யாறு கோட்டத்தில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆன்லைன் சான்று பரிந்துரை உள்ளிட்ட இணையதள பணிகளை புறக்கணித்து வருகின்றனர்.

தொடர்ந்து 4-ந்தேதி முதல் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் ஆன்லைன் சான்று பரிந்துரை உள்ளிட்ட இணையதள பணிகளை புறக்கணித்து வருகின்றனர். இந்த போராட்டத்தினால் பொதுமக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்