விபத்தில் சிக்கியவர்களுக்கு மனநல ஆலோசனை
குன்னூர் அருகே மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.;
குன்னூர் அருகே மலைப்பாதையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் சிக்கியவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அமைச்சர்கள் ஆறுதல்
குன்னூர் மலைப்பாதையில் நடந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று குன்னூர் வருகை தந்து, விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கா.ராமச்சந்திரன் ஆகியோர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண தொகையை வழங்கி ஆறுதல் கூறினர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
உடல்கள் மீட்பு
தென்காசி மாவட்டத்தில் இருந்து சுற்றுலா வந்தவர்கள், கொச்சி, குருவாயூர் பகுதிகளுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம்(30-ந் தேதி) குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்து விட்டு தென்காசிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மரப்பாலம் அருகே 60 பயணிகளுடன் பயணித்த பஸ் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இறந்த 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது.
மேலும் விபத்தில் சிக்கிய 32 பேர் குன்னூர் அரசு லாலி ஆஸ்பத்திரியில் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டு உள்ளன. விபத்தில் சிக்கிய 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு உள்ளது. அவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. 15 பேர் சிறிய காயங்களுடன் அருகில் உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
மனநல ஆலோசனை
விபத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். விபத்து நடந்த உடனேயே மாவட்ட நிர்வாகமும், மக்கள் நல்வாழ்வுத்துறையினரும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டனர். அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் சேவை பாராட்டுக்குரியது. மேலும் குன்னூர் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த தன்னார்வலர்கள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து செயல்பட்ட காரணத்தினால், மீட்பு பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா, போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உள்பட பலர் உடனிருந்தனர்.
நிவாரண உதவி
இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள செல்லம்மா, முப்பிடாதி ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் முதல்-அமைச்சரின் விபத்து நிவாரண நிதியுதவியாக 2 பேருக்கும் தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) செல்வ சுரபி, அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலா உடனிருந்தனர்.