வேளாண்மை துறையால் வழங்கப்படும் இடு பொருட்களில் தரம் இல்லை

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை துறையால் வழங்கப்படும் இடு பொருட்களில் தரம் இல்லை என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

Update: 2022-08-25 12:26 GMT

வேளாண்மைத்துறையால் வழங்கப்படும் இடுபொருளான வேப்பம் புண்ணாக்கில் தரம் இல்லை, மரத்தூள்தான் உள்ளது என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவகாமி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

இடுபொருட்கள்

அப்போது, பயிர்க்காப்பீடு திட்டத்தில் பயிர் சாகுபடி பரப்பை விட காப்பீடு செய்த அளவு அதிகமாக இருப்பதாக கூறி காப்பீடு தொகை கிடைப்பதில் சிக்கல் உள்ளது. காப்பீடு செய்வதற்கான அடங்கலை வழங்குவது கிராம நிர்வாக அலுவலர்தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மைத்துறையால் வழங்கப்படும் இடுபொருட்கள் தரமில்லாமல் உள்ளது. வேப்பம் புண்ணாக்கில் தரம் இல்லை. அதில் மரத்தூள்தான் உள்ளது. இதனை விவசாயிகள் வாங்கி பயன்படுத்தும் போது, மகசூல் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எங்களுக்கு வேளாண்மைத்துறை மீது நம்பிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் மிகப்பெரிய ஊழல் நடந்து உள்ளது. உடன்குடி அனல்மின்நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சடையநேரி கால்வாயை நிரந்தர கால்வாயாக மாற்ற வேண்டும். சாத்தான்குளத்தில் முருங்கை அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதற்கு பயிர்க்கடன் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறினர்.

நடவடிக்கை

இதற்கு பதில் அளித்து கலெக்டர் செந்தில்ராஜ் கூறுகையில், 2020-21-ம் ஆண்டு பயிர் காப்பீட்டில் விடுபட்ட பயிர்களுக்கு ரூ.50 கோடி காப்பீட்டு தொகை ஒருவாரத்துக்குள் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உரத்தட்டுப்பாடு இல்லாமல் தடுக்கும் வகையில் 2 ஆயிரத்து 955 டன் டி.ஏ.பி. உரம் வந்து உள்ளது. இந்த உரம் கூட்டுறவு சங்கங்களின் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டில் விவசாயிகளுக்கு இ-அடங்கல் வழங்கப்படும். போலி விதைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு 6 நிறுவனங்களுக்கு விற்பனை முடக்கம் செய்து உள்ளோம். சடையநேரி கால்வாய் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

(பாக்ஸ்)விவசாயிகளுக்கு தரமான விதைகள் வினியோகிக்க நடவடிக்கை

கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது, வண்டல் மண் எடுப்பதற்காக குளங்கள் அடையாளம் கண்டறியப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் விவசாயிகள் மண் அள்ள செல்லும் போது மண் பரிசோதனை செய்து வருமாறு கூறுகிறார்கள். மண் பரிசோதனை செய்த பிறகே குளங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு இருக்க வேண்டும். ஆகையால் வேளாண்மை துறையே மண் பரிசோதனை செய்ய வேண்டும். கயத்தாறு பகுதியில் தரமற்ற விதைகள் கொடுத்ததால் பயிர்கள் வளர்ச்சியடையாமல் சேதம் அடைந்து உள்ளது. இதனால் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்படும் விதைகளுக்கு, அந்த நிறுவனங்கள் கேரன்டி கார்டு தர வேண்டும் என்று கூறினர்.

இதற்கு பதில் அளித்த கலெக்டர், குளங்களில் விவசாயிகள் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் ஐகோர்ட்டு மண்பரிசோதனை செய்யாமல் மண் கொடுக்க கூடாது என்று உத்தரவிட்டு உள்ளது. இதனால் வேளாண்மை துறை மூலம் ரூ.20 கட்டணத்தில் மண் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. விவசாயிகள் வண்டல் மண் அள்ளும் போது, யாரேனும் முறைகேடாக வணிக நோக்கில் அள்ளிவிடக் கூடாது என்பதால் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறோம். அனைத்து தாசில்தார்களும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளோம். பருவகாலம் தொடங்க உள்ளதால், விவசாயிகளுக்கு தரமான விதைகள் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்