அந்தியூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துமுடி திருத்தும் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்

அந்தியூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து முடி திருத்தும் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-18 21:42 GMT

அந்தியூர்

அந்தியூரில் வட மாநில தொழிலாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து முடி திருத்தும் தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

அந்தியூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு சில சலூன் கடைகளில் வட மாநில தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். மேலும் புதிதாக உருவாகும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களிலும் வட மாநில தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுவதால் பல ஆண்டு காலங்களாக குலத்தொழிலாக செய்து வரும் சலூன் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுகின்றன.

இதை கண்டித்து கடந்த 4 நாட்களாக முடி திருத்தும் தொழிலாளர்கள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும் நேற்று முன்தினம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ரவுண்டானா பகுதியில் முடி திருத்தும் தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி திடீர் சாலை மறியலில் குடும்பத்துடன் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இந்த போராட்டத்தில் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் பச்சையப்பன், அவைத்தலைவர் பழனிசாமி, மாவட்ட அமைப்பாளர் பிரபு, கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஸ்ரீதேவி, அந்தியூர் ஒன்றிய துணைச்செயலாளர் ரவி, கனிமொழி, ஒன்றிய, நகர, நிர்வாகிகள், முடி திருத்தும் தொழிலாளர்கள், ஆண்கள் அழகு நிலைய தொழிலாளர்கள் மற்றும் மருத்துவ மக்கள் முன்னேற்ற கழகத்தினர், முடி திருத்தும் தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது முடி திருத்தும் தொழிலாளர்கள் கூறுகையில், 'சலூன் கடைகளில் வட மாநிலத்தை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளர்களை நியமிக்க கூடாது. வட மாநில தொழிலாளர்கள் புதிதாக கடை வைக்கவும் அனுமதிக்க கூடாது,' என்றனர். அதற்கு பதில் அளித்து போலீசார் கூறுகையில், 'அந்தியூர் தாசில்தார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் சேலம் சென்றுவிட்டனர். எனவே தற்போது இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது. எனவே நாளை (அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை) இதுபற்றி தாசில்தார் தாமோதரன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம்,' என்றனர். இதில் சமாதானம் அடைந்த மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர்கள் சமாதானம் அடைந்து தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து 5 மணி அளவில் கலைந்து சென்றனர். இதனால் அந்தியூரில் இருந்து செல்லும் கோபி சாலை மற்றும் பர்கூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்