நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து - 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
செங்கல்பட்டில் நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;
செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே பல ஆண்டுகளாக காய்கறி வியாபாரம் செய்து வரும் நடைபாதை கடைகளை கடந்த மாதம் 13-ந்தேதி நகராட்சி ஆணையர் தலைமையில் போலீசார் அகற்றினர். அதே இடத்தில் அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடந்து வந்தது. வியாபாரிகளுக்கு மாற்று இடமாக பழைய விருந்தினர் மாளிகையை இடித்து உழவர் சந்தை கடைகளோடு இணைத்து கழிவறை, குடிநீர் வசதி, லாரிகள் உள்ளே சென்று காய்கறிகளை இறக்குவதற்கு ஏதுவாக அனைத்து வசதிகளையும் நகராட்சி சார்பில் செய்து கொடுத்து நடைபாதை வியாபாரிகள் அங்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.
அதற்கு மறுப்பு தெரிவித்து நடைபாதை வியாபாரிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தொடர்ந்து நடைபாதை வியாபாரிகள் மற்றும் நகராட்சி ஆணையர் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி ஆணையர் மல்லிகா தலைமையில் நடைபாதை கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதையடுத்து தயார் நிலையில் இருந்த தீயணைப்பு துறையினர் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தற்கொலைக்கு முயன்ற 2 பெண்களையும் மீட்டனர். பின்னர் 4 பெண்கள் உட்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.