கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தி பேராவூரணியில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பேராவூரணி;
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி வழங்க கூடாது என வலியுறுத்தி பேராவூரணியில் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேகதாது பிரச்சினை
காவிரி ஆணையத்தின் தலைவர் மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து விவாதிப்போம் என பேசியதை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழகத்தின் காவிரி நீர் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் பேராவூரணியில் நடைபெற்றது.
கோஷம் எழுப்பினர்
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர்கள் இந்துமதி (பேராவூரணி), வீரப்பெருமாள் (சேதுபாவாசத்திரம்) இந்திய கம்யூனிஸ்டு கட்சி பேராவூரணி ஒன்றியச் செயலாளர் கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டு மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்க பொறுப்பாளர்கள் செல்வம், கலியபெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர்கந்தசாமி, மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, நிர்வாகிகள் சிவசிதம்பரம், வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஒரத்தநாடு
மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நேற்று ஒரத்தநாட்டில் கருப்புக் கொடி ஊர்வலம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரத்தநாடு பஸ் நிலையத்திலிருந்து முக்கிய வீதிகள் வழியே கருப்புக் கொடி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.