திருச்செந்தூரில் போராட்டம்; 7 பேர் மீது வழக்கு
திருச்செந்தூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்செந்தூர்:
மெஞ்ஞானபுரம் சத்யா நகரை சேர்ந்த இருதரப்பினர் இடையே கடந்த 11-ந் தேதி மோதல் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு தரப்பினர் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் திருச்செந்தூர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர் செல்வலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர். மேலும் தாலூகா போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வீரபாண்டியன்பட்டினம் குறிஞ்சி நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரித்திவிராஜ் (வயது 51), மெஞ்ஞானபுரம் சத்யா நகரை சேர்ந்த மூக்கம்மாள், மாரியம்மாள், வேம்புகனி, செல்லம்மாள், வடிவு, கோமதி ஆகியோர் மீது அரசு பணியை செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.