தேனி நகராட்சி அலுவலகத்தில் சிவசேனா கட்சியினர் தர்ணா

தேனியில் சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றக்கோரி நகராட்சி அலுவலகத்தில் சிவசேனா கட்சியினர் தர்ணா போராாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-19 17:04 GMT

தேனி சமதர்மபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அதை அகற்ற வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து அந்த குடிநீர் தொட்டியை அகற்றுவதற்காக நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் அதை அகற்றும் பணி மேற்கொள்ளப்படாமல் இருந்தது. இதையடுத்து அந்த குடிநீர் தொட்டியை உடனடியாக அகற்றக்கோரி சிவசேனா கட்சியினர் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு மாநில செயலாளர் குருஅய்யப்பன் தலைமை தாங்கினார். இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள், சேதமடைந்த குடிநீர் தொட்டியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்களிடம் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த மாத இறுதிக்குள் நகராட்சி நிதியில் இருந்து அந்த குடிநீர் தொட்டி அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து சிவசேனா கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்