பழுதடைந்த சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்

பழுதடைந்த சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டம் நடத்த போவதாக சக்தி எஸ்டேட் மக்கள் ஆவேசமாக கூறினர்.

Update: 2023-04-12 18:45 GMT

வால்பாறை

பழுதடைந்த சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் போராட்டம் நடத்த போவதாக சக்தி எஸ்டேட் மக்கள் ஆவேசமாக கூறினர்.

குண்டும், குழியுமான சாலை

வால்பாறை அருகே கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் இருந்து சக்தி எஸ்டேட் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலையில் தலநார் எஸ்டேட் பகுதியில் இருந்து சக்தி எஸ்டேட் பகுதிக்கு செல்லும் வழியில் ஒரேயொரு கொண்டை ஊசி வளைவு பகுதி மட்டும் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

இந்த பகுதி கடந்த 3 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கிடக்கிறது. இதன் காரணமாக சக்தி எஸ்டேட் பகுதியில் வசித்து வரும் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

வனப்பகுதி வழியாக நடைபயணம்

இதற்கிடையில் அந்த சாலையில் அரசு பஸ் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று தலநார் எஸ்டேட் பகுதிக்கு வந்து அங்கிருந்து அரசு பஸ்சில் ஏறி வால்பாறை, பொள்ளாச்சி பகுதிக்கு செல்லும் நிலை உள்ளது.

குறிப்பாக சக்தி எஸ்டேட் பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தினமும் வனப்பகுதி வழியாக நடந்து சென்று வருகின்றனர்.

தொட்டில் கட்டி...

இதுகுறித்து சக்தி எஸ்டேட் மக்கள் கூறியதாவது:-

எங்கள் பகுதிக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை உள்ளதால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு கர்ப்பிணி ஒருவரை தலநார் எஸ்டேட் வரை தொட்டில் கட்டி தலநார் பகுதிக்கு தூக்கி வந்து, அங்கிருந்து அரசு பஸ் மூலம் வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தோம். பலமுறை விடுத்த கோரிக்கையின்பேரில், அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தும், குறிப்பிட்ட அந்த பழுதடைந்த பகுதியை மட்டும் சீரமைத்து தர நடவடிக்ைக எடுக்கவில்லை. இதனால் வாகன போக்குவரத்து நடைபெற முடியாத நிலை தொடர்கிறது. இனிமேலும் சாலையை சீரமைக்காவிட்டால், வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்