சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை அகற்ற வலியுறுத்தி போராட்டம்

நரிக்குடி அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-13 19:33 GMT

காரியாபட்டி, 

நரிக்குடி அருகே சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

போராட்டம்

நரிக்குடி அருகே வீரசோழன் கிழக்கு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடம் ஒன்று சேதமடைந்து பல நாட்களாகியும் அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுத்து வந்தனர். மேலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாததையும் வலியுறுத்தியும் பள்ளியின் முன்பு மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்குள் அனுப்பாமல் போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரின்ஸ், நரிக்குடி வட்டார கல்வி அலுவலர் அலமேலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்தனர்.

பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நரிக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியதாவது:- இந்த பள்ளியில் சேதமடைந்த கட்டிடம் விரைவில் இடித்து அப்புறப்படுத்தப்படும். மேலும் இந்த பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்