கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்: 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது
கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 250 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
கோவை:
கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.721 வழங்க கலெக்டர் நிர்ணயித்து உள்ளார். ஆனால் அந்த கூலி உயர்வு அமல்படுத்தப்படவில்லை. இதைத் தொடர்ந்து கூலி உயர்வு, பணி நிரந்தரம் உள்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர் காந்திஜெயந்தி தினமான நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கப்போவதாக அறிவித்தனர்.
இது தொடர்பாக கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் உள்பட பலருக்கும் முன் அறிவிப்பு கொடுத்தனர். மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி தலைமையில் 2 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அது தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது.
இதையடுத்து திட்டமிட்டபடி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். கோவை நகரில் 3,500 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் தூய்மை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
இந்த நிலையில் வேலை நிறுத்த போராட்டத்தின் 2-வது நாளான இன்று கோவை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட 250 ஒப்பந்த தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது போலீசாருக்கும்- போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.