வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய குற்றவியல் சட்டங்களில் மாற்றங்களை அறிவிக்கும் புதிய மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ள மத்திய அரசு அந்த மசோதாவில் குற்றவியல் சட்டங்களின் 3 முக்கிய பிரிவான இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசாரணை சட்டம், இந்திய சாட்சியை சட்டம் மூன்றின் பெயரையும் சமஸ்கிருதத்தில் மாற்றியும், சட்டத்தில் உள்ள சரத்துகளில் பல்வேறு மக்கள் விரோத சட்டவிரோத சரத்துகளையும் புதிதாக திணித்திருப்பதால், மத்திய அரசின் இந்த அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான புதிய மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நேற்று கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு கரூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு சங்க செயலாளர் தமிழ்வாணன் தலைமை தாங்கினார். மேற்கு மண்டல துணைத்தலைவர் ரமேஷ் கண்டன உரையாற்றினார். இதில் துணை தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், பார்த்திபன், பொருளாளர் சம்பத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேகோரிக்கையை வலியுறுத்தி குளித்தலை வக்கீல் சங்கம் சார்பில் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வக்கீல் சங்க தலைவர் சாகுல்அமீது தலைமை தாங்கினார். மத்திய அரசு 3 சட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில், வக்கீல் சங்க நிர்வாகிகள் வக்கீல்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.