திண்டுக்கல்லில் ரெயில்வே குட்ஷெட் லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

திண்டுக்கல்லில் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படுவதாக கூறி ரெயில்வே குட்ஷெட் லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-27 20:45 GMT

திண்டுக்கல்லுக்கு சரக்கு ரெயில்கள் மூலம் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன்பொருட்கள், தனியார் நிறுவனத்துக்கு கோதுமை ஆகியவை வருகின்றன. இவை ரெயில் நிலையத்தின் குட்ஷெட்டில் இருந்து லாரிகள் மூலம் குடோன்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் ரேஷன்அரிசி மூட்டைகளை ஏற்றிய லாரிகள் குட்ஷெட்டில் இருந்து புறப்பட்டு, ரெயில்வே மேம்பாலம் அருகே வந்தன.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநகராட்சி கவுன்சிலர் ஜோதிபாசு தலைமையில் நகர செயலாளர் அரபுமுகமது, ஜனநாயக வாலிபர் சங்க நகர தலைவர் அஜித், செயலாளர் பிரேம் உள்ளிட்டோர் அங்கு வந்தனர். பின்னர் குட்ஷெட் லாரிகள் வேகமாக செல்வதால் விபத்து ஏற்படுவதாக கூறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் லாரிகளையும் சிறை பிடித்தனர். இதனால் லாரிகள் வெளியே செல்ல முடியாமல் ரெயில்வே மேம்பாலம் முதல் குட்ஷெட் பகுதி வரை நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டன.

இதுகுறித்து அறிந்ததும் திண்டுக்கல் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விபத்துகள் ஏற்படாத வகையில் லாரிகளை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தை கைவிட்டு திரும்பி சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் 1½ மணி நேரம் குட்ஷெட் லாரிகள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்