விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜனவரி 21 -ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்

Update: 2023-01-18 20:21 GMT

தஞ்சாவூர்;

திரு ஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஜனவரி 21 -ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

மூடிக்கிடக்கின்றன

தஞ்சாவூர் மாவட்டம், திருமண்டங்குடியிலும், கடலூர் மாவட்டம், சித்தூரிலும் உள்ள திரு ஆரூரான் சர்க்கரை ஆலை 2019-ம் ஆண்டு முதல் அரவை பணி இல்லாமல் மூடிக் கிடக்கின்றன. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ஏறத்தாழ ரூ.112 கோடி நிலுவை தொகையைக் கேட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், 12 வங்கிகளிலிருந்து ஏறக்குறைய 6,000 விவசாயிகள் பெயரில் மோசடியாக ரூ.200 கோடி அளவுக்கு ஆலை நிர்வாகம் கடன் வாங்கியது. இதன் மூலம், விவசாயிகளைக் கடனாளியாக மாற்றியுள்ளனர்.

தொடர் போராட்டம்

இந்நிலையில், திருஆரூரான் சர்க்கரை ஆலையை மற்றொரு தனியார் (கால்ஸ்) நிறுவனம் பொது ஏலத்தில் எடுத்தது. அந்த புதிய நிர்வாகமும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை, விவசாயிகள் பெயரில் பெற்ற கடன் தொடர்பாக பேசாமல் ஆலையைத் திறக்க முயற்சித்தனர்.இதனால், நிலுவை தொகையை வழங்க வேண்டும். விவசாயிகள் பெயரில் போலியாக வங்கியில் வாங்கிய கடன் தொகையை புதிய நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திருமண்டங்குடி ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்து 50 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் போராட்டம்

இது குறித்து முதல்-அமைச்சரையும், வேளாண் துறை அமைச்சரையும் நேரில் சந்தித்து, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று தீர்வு காண வேண்டும் என கூறினோம். அதன் பிறகும் விவசாயிகளின் பிரச்சினை தீரவில்லை.எனவே, திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவாகவும், கண்டு கொள்ளாத மாநில அரசை கண்டித்தும், முதல்வர் உடனடியாக தலையிட்டு வட்டியுடன் நிலுவை தொகையை வழங்கக் கோரியும், இந்த ஆலையை கூட்டுறவு துறை மூலம் மாநில அரசு நடத்த வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஜனவரி 21 -ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.நியாய விலை கடைகளில் மத்திய அரசு ஏப்ரல் 1 -ந் தேதியிலிருந்து செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதாக அறிவித்துள்ளது. ரத்த சோகை, இரும்பு சத்து குறைபாடுகளைப் போக்குவதற்காக அரிசியை செறிவூட்டி வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தாலும், மாநில அரசு அதை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது சங்கத்தின் மாவட்டச் செயலாளரர் என்.வி. கண்ணன் உடனிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்