தெருவிளக்கு எரியாததை கண்டித்து தீப்பந்தம் விற்று நூதன போராட்டம்
திக்குறிச்சியில் தெருவிளக்குகள் எரியாததை கண்டித்து பொதுமக்கள் தீப்பந்தம் விற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
களியக்காவிளை,
திக்குறிச்சியில் தெருவிளக்குகள் எரியாததை கண்டித்து பொதுமக்கள் தீப்பந்தம் விற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எரியாத தெருவிளக்குகள்
மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி, பயணம் பகுதிகளை இணைக்கும் வகையில் தாமிரபரணி ஆற்றில் பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தில் உள்ள தெரு விளக்குகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதி மதுபிரியர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
இதனால் தொலைதூர பகுதிகளில் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவரும் மாணவிகள் மற்றும் வேலை முடிந்து வரும் பெண்கள் இந்த பகுதியை மிகவும் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இந்த பகுதி இருள் சூழ்ந்திருப்பதை பயன்படுத்தி இறைச்சி, மருத்துவ கழிவுகளை தாமிரபரணி ஆற்றிலும் கரைபகுதியிலும் கொட்டி செல்கிறார்கள்.
நூதன போராட்டம்
எனவே இந்த பாலத்தில் தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பேரூராட்சி, மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத்தெரிகிறது.
இதைகண்டித்து அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இருள் சூழ்ந்த பாலத்தில் தீப்பந்தம், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி போன்ற பொருட்களை விற்பனை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக அந்த பகுதியில் தற்காலிக கடை அமைத்து வெளிச்சம் தரும் பொருட்களை அந்த வழியாக சென்ற பாதசாரிகளுக்கு ரூ.5 முதல் ரூ.50 வரை விற்பனை செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தீப்பந்தங்களுடன் பாலத்தில் நடந்து சென்றனர். இதில் அதே பகுதியை சேர்ந்த சுஜின் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.