சாலையில் திரியும் மாடுகளை பிடித்ததை எதிர்த்து மறியல்

திண்டுக்கல்லில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்ததை எதிர்த்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-20 17:10 GMT

திண்டுக்கல் மாநகராட்சியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அதிகாரிகள் பிடித்து அபராதம் விதிக்க தொடங்கி உள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் 12 மாடுகள், 10 கன்று குட்டிகளை அதிகாரிகள் பிடித்தனர். அவை அனைத்தையும் மாநகராட்சி வாகன காப்பகத்தில் இருக்கும் உரப்பூங்காவில் அடைத்து வைத்தனர். மேலும் ஒரு மாட்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் செலுத்தி மாடுகளை மீட்காவிட்டால் ஏலமிடப்படும் என்று அறிவித்தனர். இதற்கிடையே மாடுகள் வீட்டுக்கு வராததால் அவற்றின் உரிமையாளர்கள் நேற்று மாடுகள் அடைத்து வைத்துள்ள உரப்பூங்காவுக்கு வந்தனர். அப்போது 8 மாடுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஆனால் கன்றுகுட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை.

இதைத்தொடர்ந்து 8 மாடுகள் மற்றும் 10 கன்று குட்டிகளை அதிகாரிகள் விடுவித்தனர். மேலும் இனிமேல் மாடுகளை சாலையில் விடமாட்டேன் என்று உரிமையாளர்கள் எழுதி கொடுத்தனர். இந்தநிலையில் நேற்று ஆர்.எம்.காலனியில் 4 மாடுகளை அதிகாரிகள் பிடித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டின் உரிமையாளர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். எனினும் அதிகாரிகள் மாடுகளை பிடித்து சென்று அடைத்து விட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்