சூனாம்பேடு அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்

சூனாம்பேடு அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.

Update: 2022-06-09 13:02 GMT

வீடுகளை அகற்ற உத்தரவு

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சூனாம்பேடு அடுத்த அரசூர் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அமைந்துள்ள ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் 22 குடும்பத்தினர் தங்களின் குடும்பத்தினருடன் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை, மின்சார வசதிகள் பெற்று 40 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் கட்டப்பட்டுள்ள 22 வீடுகளை மார்ச் மாதம் 31-ந்தேதிக்குள் அகற்றக்கோரி வருவாய்த்துறையினருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவதாக கூறி கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி செய்யூர் தாசில்தார் மற்றும் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முற்பட்டபோது அந்த பகுதி மக்கள் தாசில்தாரின் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சாலை மறியல்

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ள 22 வீடுகளை அகற்ற வருவாய்த்துறையினர் முற்பட்டனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த 2 பொக்லைன் எந்திரங்களை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். இதுவரை தங்களுக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை. இனிமேல் வழங்கப்பட உள்ள மாற்று இடத்தில் தொகுப்பு வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் சூனாம்பேடு - தொழுப்பேடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது ஒரு பெண் தன்னுடைய உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து மதுராந்தகம் ஆர்.டி.ஓ. சரஸ்வதி, செய்யூர் தாசில்தார் சகுந்தலா தலைமையில் வருவாய்த்துறையினர் அந்த பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வீடுகள் இடிப்பு

மாற்று இடத்தை உடனடியாக வழங்கவும், வழங்கப்பட்ட இடத்தில் தொகுப்பு வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செய்யூர் தாசில்தார் சகுந்தலா தலைமையில் வருவாய் ஆய்வாளர் பெருமாள், கிராம நிர்வாக அலுவலர் ராமன் முன்னிலையில் 3 பொக்லைன் எந்திரங்கள் மூலமாக ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.

அப்போது வீட்டின் உரிமையாளர்கள் கதறி அழுதனர். அங்கு இருந்த 22 ஆக்கிரமிப்பு வீடுகளும் அகற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்