காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு: தமிழக-கர்நாடக மாநில எல்லையில் கன்னட அமைப்பினர் சாலை மறியல்-முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படத்தை கிழித்து எறிந்ததால் பரபரப்பு

தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் நேற்று ஓசூர் அருகே தமிழக-கர்நாடக எல்லையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை கிழித்து எறிந்து எதிர்ப்பை தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

Update: 2023-09-13 18:45 GMT

ஓசூர்:

சாலை மறியல்

புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு, தினமும் காவிரி ஆற்றில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லை என்பதாலும், அங்குள்ள தண்ணீர் அந்த மாநில மக்களுக்கு குடிநீருக்கு கூட பற்றாக்குறையாக இருக்கும் என்பதாலும் தண்ணீர் திறந்து விட இயலாது என கர்நாடக மாநில துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியிருந்தார். மேலும் காவிரி விவகாரத்தில் தமிழகம் பிடிவாத போக்கை கடைபிடிப்பதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட மாட்டோம் என்றும், தங்களுக்கே போதிய அளவில் தண்ணீர் இல்லை என்றும் கூறி காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னட சலுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் காலிக்குடங்களுடன் அத்திப்பள்ளியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மு.க.ஸ்டாலின் உருவப்படம் கிழிப்பு

அப்போது அவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவப்படங்களை கிழித்து எறிந்து எதிர்ப்பு தெரிவித்ததுடன், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட முடியாது எனவும் முழக்கமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட, 20 பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்களை அத்திப்பள்ளி போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.

இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஓசூர் சிப்காட் பகுதியிலேயே சுமார் 2 கிலோமீட்டர் தொலைவிற்கு நிறுத்தப்பட்டன. பின்னர் எல்லையில் இயல்பு நிலை திரும்பியதும், வழக்கம் போல் அனைத்து வாகனங்களும் அத்திப்பள்ளி வழியாக வந்து சென்றன.

Tags:    

மேலும் செய்திகள்