குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் மறியல்

பெரம்பலூரில் குடிநீா் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-06-04 18:30 GMT

சாலை மறியல்

பெரம்பலூர் நகராட்சி 21-வது வார்டுக்குட்பட்ட புறநகர் பகுதியான துறைமங்கலம் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை திடீரென்று காலிக்குடங்களுடன் துறைமங்கலம் மூன்று ரோடு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார், நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

குடிநீர் குழாயில் உடைப்பு

இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள தாளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக வரும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று (திங்கட்கிழமை) மாலைக்குள் சரி செய்து விடுவார்கள். அதன்பிறகு காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படும். தற்போது அதற்கு மாற்றாக வாகனம் மூலம் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதில், சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அந்தப்பகுதிக்கு வாகனம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்