ஆதிதிராவிடர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கியதற்கு எதிர்ப்பு: பள்ளிப்பட்டு-சோளிங்கர் சாலையில் கிராம மக்கள் திடீர் மறியல்
ஆர்.கே.பேட்டை அருகே ஆதிதிராவிட மக்களுக்கு இலவசமாக நிலம் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவுக்குட்பட்ட ஆர்.கே.பேட்டை அருகே ராஜா நகரம் மோட்டூர் கிழக்கு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டி உள்ள நிலத்தை அப்பகுதியிலுள்ள ஆதிதிராவிடர்கள் 100 பேருக்கு அரசு இலவசமாக வழங்கியது. ஆனால் அவர்களுக்கு வழங்கிய நிலங்களுக்கு அளவுகளை வழங்காததால் அவர்கள் வீடுகளை கட்டிக்கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. சுமார் 17 வருடங்களாக போராடி நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு திருத்தணி ஆர்.டி.ஓ. சத்யா முன்னிலையில் ஆதிதிராவிடர்களுக்கு நிலம் அளந்து கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜா நகரம் மோட்டூர் கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு சமுதாயத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை பள்ளிப்பட்டு-சோளிங்கர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதில், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்த திருத்தணி ஆர்.டி.ஓ.சத்யா அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து சமாதான குழு கூட்டம் இன்னும் ஒரு வாரத்தில் கூட்ட இருப்பதாகவும், அதில் இதுகுறித்து பேசி முடிவு எடுக்கப்படும் எனவும் ஆர்.டி.ஓ.சத்யா கூறியதை தொடர்ந்து, கிராம மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து, அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.