பேரணாம்பட்டு புதிய பஸ் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் செய்ய எதிர்ப்பு

Update: 2022-07-30 18:12 GMT

பேரணாம்பட்டு நகராட்சி கூட்டத்தில் புதிய பஸ்நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

நகராட்சி கூட்டம்

பேரணாம்பட்டு நகர்மன்ற கூட்டம், தலைவர் பிரேமா வெற்றிவேல் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் ஆலியார்ஜூபேர் அஹம்மத், ஆணையாளர் சுபாஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். யில் நடந்தது.

கூட்டத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட பேரணாம்பட்டு புதிய பஸ் நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள மன்ற அனுமதி கோரி தீர்மானம் வைக்கப்பட்டது. அப்போது நடந்த விவாதம்வருமாறு:-

கிழித்து எறிந்தார்

அப்துல் ஹமீத் (சுயே): அ.திமு.க. ஆட்சியில் பேரணாம்பட்டு புதிய பஸ் நிலையத்தை ஊருக்கு வெளியில் கொண்டு வந்தனர். சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் புதிய பஸ் நிலையத்தை ஏற்படுத்த விடமாட்டோம் என தி.மு.க. சொல்லி வந்தது. ஆனால் தற்போது புதிய பஸ் நிலையத்திற்கு தீர்மானம் வைத்திருப்பது அ.தி.மு.க நெஞ்சில் குத்தியது. தி.மு.க. முதுகில் குத்துகிறது என கூறி அஜெண்டாவை கிழித்து எறிந்தார். இதனால் மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது

துணை தலைவர் ஆலியார் ஜூபேர் அஹம்மத்: கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் அது. அதை தலைவர், துணைத் தலைவர் உறுப்பினர்கள் யாரும் ஆதரிக்க வில்லை. இது சம்மந்தமான தீர்மானத்தை அனைவரும் நிராகரிக்கரிக்கிறோம்.

தலைவர் பிரேமா வெற்றிவேல்: தற்போதுள்ள பழைய பஸ் நிலையம் விரிவாக்கம் செய்து செயல்படுத்தப்படும்.

அப்துல் ஜமீல் (தி.மு.க.): ரூ.1,½ கோடியில் குடிநீர் பணிகள் செய்ததில் முறைகேடு நடந்துள்ளது. நகரில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

முக்கியத்துவம் கொடுங்கள்

துணை தலைவர்: குப்பை கொட்டும் இடம் சம்மந்தமாக கலெக்டரிடம் நேரில் சந்தித்து முறையிட்டு இடம் தேர்வு செய்து தர சொல்ல வேண்டும். பேரணாம்பட்டு பேரூராட்சியாக இருந்த போது 21 வார்டுகள் இருந்தது. நகராட்சியாக உயர்ந்த பிறகும் அதே 21 வார்டுகள் தான் உள்ளது. வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்

அஹம்மத் பாஷா (தி.மு.க.): மண்டபம், ஓட்டல்கள், டீ கடைகளில் மட்டும் குப்பைகள் வாங்கப்படுகிறது. பொதுமக்களிடம் குப்பைகள் வாங்க மறுக்கின்றனர்.

தன்விரா பேகம் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்): தலைவர், துணை தலைவர் வார்டுகள் மட்டும் சுத்தமாக உள்ளது. மற்ற வார்டுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.

தீர்மானம் ஒத்திவைப்பு

முஜம்மில் அஹம்மத் (காங்கிரஸ்) பேரணாம்பட்டு நெடுஞ்சாலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

அதீகுர் ரஹ்மான் (சுயே): எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சம் கொடுத்துள்ளார்: அது நகராட்சி தலைவர், துணை தலைவர், நகர செயலாளர், அவை தலைவர் ஆகியோரின் வார்டுகளுக்கு மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

துணை தலைவர் - புதிய பஸ் நிலையத்தில் ரூ.5 கோடி செலவில் உட்கட்டமைப்பு பணி மேற்கொள்ள மன்ற அனுமதி கோரி வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேட்சை என அனைத்து உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது.

உறுப்பினர்கள் கேள்விகளுக்கு ஆணையாளர் சுபாஷினியும் பதிலளித்தார்..

Tags:    

மேலும் செய்திகள்