நம்பியூர் அருகே மின்மயானம் அமைக்க எதிர்ப்பு: வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம்

நம்பியூர் அருகே மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-29 21:55 GMT

நம்பியூர்

நம்பியூர் அருகே மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே காமராஜ் காலனியில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் அரசு ஆஸ்பத்திரி, அரசு தொடக்கப்பள்ளி அருகே மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று அந்த பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். மேலும் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக அனைவரும் ஓரிடத்தில் கூடி நின்று கருப்பு கொடி ஏந்தி கோஷமிட்டனர்.

மின்மயானம் அமைக்க எதிர்ப்பு

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, 'நம்பியூரில் இருந்து செல்லும் எலத்தூர் ஓடையை ஆக்கிரமித்து மின்மயானம் அமைக்கப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம் அருகே அமைப்பதால் மாணவ-மாணவிகளும் பாதிக்கப்படுவார்கள். எனவே மின் மயானம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து எங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தியுள்ளோம். உடனே திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் திட்டத்தை கைவிடும் வரை தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்' என்றனர். நம்பியூர் அருகே மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்