செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்யகோரி கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் - கே.பி.முனுசாமி பங்கேற்பு

Update: 2023-06-21 19:00 GMT

செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து பதவி நீக்கம் செய்யகோரி கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் நேற்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

துறை இல்லாத அமைச்சர்

பல்வேறு ஊழல் வழக்குகள் தொடரப்பட்டு அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, பொறுப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினோ, அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்காமல், துறை இல்லாத அமைச்சராக வைத்திருக்கிறார்.

அமைச்சர் பதவியை வைத்து தப்பித்து கொள்ள முயற்சிக்கிறார். சட்டத்தின் முன்பு யாரும் தப்ப முடியாது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை என்பது மிகப்பெரிய துறை. எந்தவித பின்புலமும் இல்லாமல் வருவாய் வரக்கூடியதுறை.

சர்வாதிகார ஆட்சி

மின்சாரத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிக்கை விடுகிறார்கள். தமிழகத்தில் அராஜக, சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. அனைத்து அமைச்சர்களையும் தட்டி கேட்கும் உரிமை முதல்-அமைச்சருக்கு உண்டு. ஆனால் குற்றம்சாட்டப்பட்ட நபரை முதல்-அமைச்சர் குடும்பத்துடன் சென்று சந்திக்கிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழி போட்டு தன்னை காப்பாற்றி கொள்ள முயல்கிறார். பல கோடி ரூபாய் ஊழல் செய்தவர்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி நீக்கம் செய்யவில்லை. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம் ரூ.20 கோடியில் உருவாக்கி கொடுத்து, இரண்டு ஆண்டுகளாகியும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

அதேபோல ஓசூரில், 12 ஆயிரம் டன் நெல் திறந்தவெளியில் மழையிலே நனைந்து கொண்டுள்ளது. அதற்கும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கோஷங்கள்

தொடர்ந்து தமிழகத்தில் ஊழல்முறைகேடுகள் தொடர்வதை கண்டித்தும், சட்டம்- ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்யகோரியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் தமிழ்செல்வம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம் நாகராஜ், முன்னாள் எம்.பி. பெருமாள், முனிவெங்கட்டப்பன், கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தங்கமுத்து மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்