வெப்படை அருகே வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2023-05-01 18:45 GMT

பள்ளிபாளையம்:

வெப்படை அருகே வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழிப்பாதை ஆக்கிரமிப்பு

பள்ளிபாளையத்தை அடுத்த வெப்படை பாதரை அருகே வேப்பங்காடு உள்ளது. இந்த பகுதியில் பொது வழிப்பாதை இருந்தது. இதனை நீண்ட காலமாக அந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் பாதையையொட்டி விவசாயம் செய்து வரும் சிலர், அதனை ஆக்கிரமித்தனர்.

இதனால் அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் முக்கிய பகுதிகளுக்கு நீண்ட தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொது வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இந்தநிலையில் வேப்பங்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள், வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும், அதனை மீட்டு தரக்கோரியும் திருச்செங்கோடு செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த வெப்படை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பொது வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று உறுதி அளித்தனர். இதில் பொதுமக்கள் சமாதானம் அடைந்து மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. பொதுமக்களின் இந்த திடீர் சாலை மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்