12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-04-03 18:45 GMT

நாமக்கல்:

நாமக்கல்லில் நேற்று 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் 31.3.2023 உடன் முடிவடைந்து உள்ளதால், 1.4.2023 முதல் புதிய ஊதிய விகிதம் மாற்றி அமைத்திடும் வகையில், ஊதியகுழு அமைக்கப்பட்டு, விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பன உள்பட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில கவுரவ பொதுச்செயலாளர் குப்புசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கருப்பண்ணன், கிழக்கு மண்டல தலைவர் மாதவன், மாவட்ட தலைவர் சிவசங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிதி நெருக்கடிக்கு தீர்வு

கடன் தள்ளுபடி அனுமதிக்கப்பட்ட பயிர்க்கடன், நகைக்கடன், மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் அனைத்துக்கும், உரிய தொகையை வட்டி இழப்பின்றி அனைத்து சங்கங்களுக்கும் வரவு வைக்கப்பட்டு, சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு, கேரளாவில் வழங்குவது போல், ஓய்வூதியம் வழங்க, கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகள் அங்கு சென்று வந்தனர். அங்குள்ள நடைமுறையை பின்பற்றி, எங்களுக்கும் ஓய்வூதியம் வழங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஊர்வலம்

முன்னதாக நாமக்கல் நல்லிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் இருந்து, ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் வந்தனர். இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் காமராஜ், துணை தலைவர் மணி, மாவட்ட இணை செயலாளர்கள் ராஜாமணி, கருணாநிதி மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்