தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்களில் கருப்பு துணி கட்டி சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-04-01 18:45 GMT

தர்மபுரி:

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கண்களில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க தர்மபுரி மாவட்ட துணைத்தலைவர் எலசியப்பன் தலைமை தாங்கினார்.

மாநில துணைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் மதலைமுத்து, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காவேரி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி புகழேந்தி, அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் குப்புசாமி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்ட செயலாளர் பெருமாள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

காலமுறை ஊதியம்

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு வருவாய் கிராம ஊழியர்களுக்கு இணையான மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.6 ஆயிரத்து 750 வழங்க வேண்டும். அரசு துறையில் உள்ள காலி இடங்களில் தகுதியுள்ள சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களை பணி அமர்த்த வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

பள்ளிகளில் செயல்படுத்தப்படும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு திட்டத்தில் இணைக்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

மேலும் செய்திகள்