சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்பப் பெறக்கோரி லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-04-01 18:45 GMT

நல்லம்பள்ளி:

சுங்கச்சாவடி கட்டண உயர்வை திருப்பப் பெறக்கோரி பாளையம் சுங்கச்சாவடியில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நல்லம்பள்ளி அருகே உள்ள பாளையம் சுங்கச்சாவடியில் லாரி உரிமையாளர்கள் சங்கம், டூரிஸ்ட் வேன் சங்கம், கார் சங்கம், மினி டெம்போ உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்க மாநில துணைத்தலைவர் நாட்டான் மாது தலைமை தாங்கி, ஆர்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை

சுங்கச்சாவடி கட்டண உயர்வால் மோட்டார் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த காலம் முடிந்த பின்பும் பயன்பாட்டில் இருந்து வரும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என மத்திய அரசிற்கு பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்தோம். ஆனால் அவற்றை அகற்றாமல், புதுப்பித்து கொடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

சுங்கச்சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை ஒரே நேரத்தில் செலுத்தி விடுகிறோம், அதனால் சுங்கச்சாவடிகளை அகற்றுங்கள் என தெரிவித்தும், அதனை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. உலகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சுங்கச்சாவடிகள் உள்ளன. அவை வெளிப்படை தன்மையுடன் இயங்கி வருகின்றன. அதாவது சுங்கச்சாவடிக்கான ஒப்பந்த காலம், வாகன கட்டணம், வசூலிக்கும் தொகை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் காட்சி படுத்தப்படுகின்றன. ஆனால் இங்குள்ள சுங்கச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் கூட சரியாக இயங்குவதில்லை.

அகற்ற வேண்டும்

மேலும் சாலைகளை பராமரிப்பதற்காக பெட்ரோலுக்கு ரூ.2-ம், டீசலுக்கு ரூ.1.50-ம் வரியாக வசூலிக்கப்படும் போது சுங்கச்சாவடிகள் தேவையில்லை. எனவே மோட்டார் தொழிலை நசுக்கும் சுங்கக்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். ஒப்பந்த காலம் முடிவுற்ற சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சையத்பாஷா, அண்ணாதுரை, முருகேசன், முத்து, சக்திவேல், தன்ராஜ், முல்லைவேந்தன், ராஜா, ஜெமினி, பார்த்திபன் மற்றும் லாரி உரிமையாளர்கள் திரளாக கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்