தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயர்வு, சரண்டர் விடுப்பு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அழித்திடும் அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும். காலமுறை, தொகுப்பூதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, ஊர்ப்புற நூலகர், செவிலியர், கிராம உதவியாளர் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பேயத்தேவன் தலைமை தாங்கி பேசினார். மாநில துணை பொது செயலாளர் மங்கள பாண்டியன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் தாஜுதீன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பொது சுகாதாரத்துறை சங்க தலைவர் ராஜேந்திரன், சத்துணவு ஊழியர் சங்க செயலாளர் பவானி, கூட்டுறவு ஊழியர் சங்க தலைவர் ரவிக்குமார், தோட்டக்கலை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.